#+TITLE: தமிழ்ப்படுத்துதலும் தமிழ் மனமும் #+AUTHOR: நாகூர் ரூமி எல்லா மனிதர்களுக்கும் ஆதாம் ஏவாள்தான் ஆதி பெற்றோர் என்றும் மனுவிலிருந்துதான் மனிதன் தோன்றினால் என்றும் சமயங்கள் கூறுகின்றன. இல்லை குரங்குதான் என்று டார்வினியம் கூறுகிறது. அனுமார் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளலாம். ஆதி வானரங்களுக்குத்தான் ஆதாம் ஏவாள் என்று பெயரோ என்றும் சிலர் ஆராய்ச்சி செய்வதாகத் தகவல். சரி, அது எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் பெற்றோர் யார் என்ற அதையொத்த பிரச்சனை இன்னொரு விஷயத்திலும் உண்டு. அதுதான் தகவல் பரிமாற்றத்துக்கும் இலக்கிய கலாச்சாரப் பரிவர்த்தனைக்குமாக மனிதன் பயன்படுத்தும் அத்தியாவசிய உபகரணமாக, வடிவமாக, வடிகாலாக இருக்கின்ற மொழி. இந்த உலகில் இதுவரை பேசப்படுகின்ற எழுதப்படுகின்ற எல்லா மொழிகளுக்கும் பெற்றோர் ஒருவரே என்று மொழி வரலாற்று நூல்கள் கூறுகின்றன. அதன் பெயர் இந்தோ-ஐரோப்பிய மொழி என்றும் சொல்லுகிறது. இந்த விஷயத்தை கொஞ்சம் ஞாபகம் வைத்துக்கொள்வது மேற்கொண்டு இந்த கட்டுரையில் சொல்லவருகின்ற விஷயத்தில் தெளிவுபெற உதவும். விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் ஒளி வேகத்தில் சென்று கொண்டிருக்கும் காலகட்டத்தில் அந்த வேகத்துக்கு ஈடுகொடுக்க வேண்டும் என்ற முனைப்பினாலோ என்னவோ பண்டித சிகாமணிகள் தமிழைத் தூய்மைப் படுத்துகிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு சீரியஸாக சிலபல காரியங்களை செய்துகொண்டிருக்கிறார்கள். அதிலுள்ள சில ஆட்சேபணைக்குரிய அம்சங்களைப் பற்றிமட்டும் இங்கு நான் பேசவிரும்புகிறேன். முதல் ஆட்சேபணை மொழித்தூய்மை என்ற கருத்து. மொழித்தூய்மை என்பதே ஒரு தவறான கருத்தாக்கம் அல்ல. ஆனால் ஒரு மொழியின் தூய்மையை எது கெடுக்கிறது என்பதைப் பண்டிதர்கள் புரிந்துகொண்டதிலிருந்து நான் வேறுபடுகிறேன். தமிழ்ப்படுத்துதல் என்பது வேறு தமிழைப் படுத்துதல் என்பது வேறு. ஆனால் இந்த இரண்டாவதைத்தான் முன்னது என்று பல பிரகஸ்பதிகள் நினைத்துக்கொண்டு காரியத்திலும் கருமமே கண்ணாக இறங்கிவிடுவதால்தான் இவ்வளவும் சொல்லவேண்டியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் "The govt. has a big role to play" என்பதை தமிழக அரசின் பொருளாதார பாடப்புத்தகத்தில், "அரசு விளையாடுவதற்கு ஒரு பெரிய உருளையை வைத்துக்கொண்டிருக்கிறது" என்று 'தமிழாக்கி' இருந்ததாக துக்ளக் இதழில் ஒரு செய்தி வந்தது ! பண்டித மொழிபெயர்ப்புக்கு ஒரு உதாரணம்தான் இது. இந்த கருமமே கண்ணாயினார்கள் சாதாரண ஆசாமிகளாக இல்லை. அரசுத்துறைகளிலும், மொழிவளர்ச்சித் துறைகளிலும் பொறுப்புகளில் இருப்பவர்களாகவும் அதிகாரம் சாராத பண்பாட்டு வளர்ச்சித்துறைகளில் பணியாற்றுபவர்களாகவும் அல்லது குறைந்த பட்சம் நாடறியப் புகழ்பெற்றவர்களாகவும் அறிஞர்கள் என்று அறியப்பட்டவர்களாகவும் உள்ளவர்கள். இவர்கள் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்று எல்லோரும் நினைக்கின்ற நிலையில் இருப்பவர்கள் இவர்கள். என்ன துரதிருஷ்டம் ?! தூயதமிழ் என்ற ஒரு தவறான கொள்கையை சின்னவீடு மாதிரி இவர்கள் மிகவும் பிரியமாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழாக்கங்களில் ஏற்படுகின்ற எல்லாக் குழப்பங்களுக்கும் அபத்தங்களுக்கும் இந்த கருத்தாக்கம்தான் அடிப்படைக் காரணமாக உள்ளது. அப்படியானால் தூய தமிழ் என்று ஒன்று இல்லையா என்று கேட்கலாம். திருக்குறள் தூயதமிழில் இல்லையா என்றும் நினைக்கலாம். ஒரு மொழியின் தூய்மை என்பது குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் அதன் சொற்களை அடைக்க முயற்சிப்பதல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். ஒரு மலையாளி ஆங்கிலம் பேசும்போது அதில் மலையாள வாசம் கலந்துவிடுவதுபோல, ஒரு தமிழன் ஹிந்தி பேசினால்கூட அதில் தமிழின் மணமிருக்கும். அந்த வாசம்தான் தமிழின் தூய்மை. அதுதான் அதன் தமிழ்மை. ஒரு குறிப்பிட்ட மொழி எத்தனை மொழிகளில் இருந்து சொற்களை எடுத்து தன்வயப்படுத்திக் கொள்கிறது -- கடன் வாங்கிக்கொள்கிறது என்று நான் சொல்லவில்லை, கவனிக்கவும் -- என்பதை வைத்து அதன் வளர்ச்சியின் நிலையையும் பக்குவத்தையும் புரிந்துகொள்ளலாம். எந்த மொழியும் ஆகாயத்திலிருந்து இறங்கிவரவில்லை. (நபிகள் நாயகம் அவர்களுக்கு வானவர் ஜிப்ரயீல் மூலம் இறைச்செய்தி வந்ததாக இஸ்லாம் கூறுகிறது. அதனால் அரபி மொழி வானத்திலிருந்து வரவில்லையா என்று சிலர் கேட்கலாம். அது அப்படியல்ல. இறைச்செய்தி வண்டுகளின் ரீங்காரம் போலவும் மணியோசை போலவும்கூட வந்திருப்பதாக ஹதீஸ் உண்டு. அதாவது ரீங்காரத்திலும் மணியோசையிலும் இருந்து கிடைத்த செய்தி அரபியில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது என்பதே அதன் உட்குறிப்பு. இது மார்க்கங்களின் ரகசியங்களில் ஒன்றாக இருக்கலாம்). மாறாக, மொழி என்பது ஒரு பண்பாட்டின் குறியீடாக உள்ளது. அது ஒரு சமுதாயப் படைப்பு. சமுதாயம் என்பது பல்வேறுபட்ட பழக்க வழக்கங்களையும், குணாம்சங்களையும், வாழ்முறைகளையும், தனித்துவங்களையும், கோட்பாடுகளையும், நம்பிக்கைகளையும் கொண்ட மனிதர்களைக் கொண்டது. கற்கால மனிதன்கூட தனித்துவம் கொண்டவன்தான். இல்லையெனில் தற்கால மனிதன் அவனை கற்கால மனிதன் என்று எப்படி வேறுபடுத்திப் பார்க்க முடியும்? மாறிக்கொண்டே இருக்கும் சமுதாய வாழ்வில் மொழியை மட்டும் தூய்மை என்ற பெயரில் செக்குமாடாக்குவது எந்த வகையில் நியாயம்? நமது இன்றைய வாழ்வு ஒரு ஆரோக்கியமான கலவையாக உள்ளது. இன்றைக்கு 'பேன்ட்' போடாத அல்லது அணியத் தெரியாத தமிழனே இல்லையென்று கூறலாம். நாம் சார்ந்து வாழும் மின்சாரம், தொலைபேசி, தொலைக்காட்சி, இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், விமானம், கம்ப்யூட்டர் போன்ற அனைத்தும் தமிழனின் படைப்பா என்ன? இதையெல்லாம் எந்தக் கேள்வியும் இன்றி ஏற்றுக்கொள்கின்ற நாம் மொழியில் மட்டும் ஏன் தூய்மையைக் கோரவேண்டும்? 'பஸ்'ஸை பேருந்து என்றும் 'செக்'கை காசோலை என்றும் கம்ப்யூட்டரை கணிணி என்று கணிப்பொறி என்றும் குழப்பமாக தமிழ்ப்படுத்த வேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டது? எந்த தமிழனாவது, "இன்று நான் பேருந்தில் வந்தேன்" என்று சொல்கிறானா? ரோஜாப்பூ ரோசாப்பூவானதிலிருந்து ரோஜா அதன் அழகையும் நறுமணத்தையும் இழந்து தவிக்கிறது. மகாகவி பாரதிகூட -- இந்த 'மகாகவி'யில் உள்ள 'மகா'கூட தமிழில்லை சரிதானே? -- "தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என்றுதானே பாடினான்? "சகத்தினை" என்று பாடவில்லையே? ஏன்? 'ஜ'வின் கம்பீரம் 'ச'வில் இல்லை. அதனால்தான். கம்பீரக் கவிஞனான பாரதிக்கு அது புரியும். அதனால்தான். வடமொழி என்றும் ஆங்கிலம் என்றும் இனி புலம்பிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. ஆங்கிலம் ஒரு இந்தியமொழி. அது தன் அன்னியத்தன்மையை இழந்து அரை நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது. ஹிந்தி, தமிழ், அரபிக், உர்து, ·ப்ரென்ச் என்றெல்லாம் வித்தியாசம் பாராட்டாமல் எல்லா மொழியிலிருந்தும் சொற்களை அணைத்துக்கொண்டதால் ஆங்கிலம் கற்பிழந்துவிட்டதா என்ன? மாறாக அசுர வளர்ச்சி கண்டுவிட்டது. இனியும் அதன் விஸ்வரூபம் வளரும். ஆனால் நாம் மட்டும் தமிழின் தலையிலடித்து இன்னும் ஏன் வாமனமாகவே -- அம்மணமாகவே என்பதுபோல் இல்லை? -- அதை வைத்திருக்க வேண்டும்? தமிழுக்கும் பெருந்தன்மை உண்டு. தனித்துவம் உண்டு. வளர்ச்சி உண்டு. சாத்தியக்கூறுகள் உண்டு. ஆனால் தூய்மைவாதிகள்தான் தமிழின் வளர்ச்சியைத் தடுக்கும் சீனப்பெருஞ்சுவர்களாக உள்ளனர். Trunk Call என்பதற்கும் Coffee என்பதற்கும் அரசு அங்கீகாரம் பெற்ற தமிழாக்கங்கள் என்ன தெரியுமா? முன்னது 'முண்டக்கூவி' பின்னது 'கொட்டைவடி நீர்'! உறங்குவது போலும் சாக்காடு என்று சொல்வார்கள். திட்டுவது போலும் தமிழாக்கம் என்று சொல்லத் தோன்றுகிறது! தமிழ் இன்று இரண்டு மொழிகளாகப் பிரிந்து கிடக்கிறது. ஒன்று, பேசப்படும் மொழி. இரண்டு, எழுதப்படுகின்ற, திணிக்கப்படுகின்ற, விளம்பரப்படுத்தப்படுகின்ற மொழி. படிக்காத பெண்கள்கூட, "என் மகன் கம்ப்யூட்ட சய்ன்ஸ் படிக்கிறான்" என்றோ "டாக்டரைப் பார்க்கப் போனோம்" என்றோதான் சொல்கிறார்கள். "என் மகன் கணினி விஞ்ஞானம் பயில்கிறான்" என்று சொல்வதில்லை. "மருத்துவரைப் பார்க்கச் சென்றோம்" என்று சொல்வதில்லை. எந்த வங்கி ஊழியரும், "நான் வங்கிக்குக் செல்கிறேன்" என்று கூறுவதில்லை. எழுதுவதும் இல்லை. பேங்க், பஸ், காப்பி, டீ, கம்ப்யூட்டர் போன்ற சொற்களை தமிழ் மனம் ஏற்றுக்கொள்கிறது. படித்தவரும் பாமரரும் பயன்படுத்துகின்றனர். அவை ஆங்கில வார்த்தைகள் என்று யாரும் நினைப்பதில்லை. உண்மையில் அவை தமிழ்ச் சொற்கள் என்றே பாமரர் நினைக்கின்றனர். எந்த மொழியை மக்கள் அனைவரும் பயன்படுத்த முடியாதோ, அந்த மொழி அல்லது அந்த மொழியின் பகுதி செத்துப் போனதாகும். தமிழைப் பொறுத்தவரை அது செத்துப்போகவில்லை. மாறாக, கொல்லப்படுகிறது. தமிழாக்கம் செய்கின்றவர்கள் பண்பாட்டையும் பயன்பாட்டையும் மனதில் வைத்து செய்வதில்லை. கா·பியை கா·பியாகவே ஏற்றுக்கொள்வதால் சுவை குறையப்போவதில்லை. சிந்தனைப் பின்புலமின்றி, அன்னியமொழியின் சொற்களை மட்டும் தமிழ்ப்படுத்துவதால் எந்தப்பயனுமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக software என்பதை 'சா·ப்ட்வேர்' என்றே எழுதலாம். சொல்லலாம். அதை 'மென்பொருள்' என்று ஏன் சொல்லவேண்டும்? எல்லா ஆங்கில சொற்களுக்கும் இணையான தமிழ்ச்சொற்கள் எங்களிடம் இருக்கின்றன என்ற பெருமைக்காகவா? மென்பொருள் என்பது பஞ்சிலிருந்து மார்புவரை மென்மையான எந்தப் பொருளையும் குறிக்கலாமல்லவா? ஏன் இந்தக் குழப்பமும் விளக்க அகராதியும்? Software என்பதற்கு இணையான சொல்லை நாம் தரமுடியாது. காரணம், அது நம்முடைய சிந்தனையல்ல. அடுத்தவன் சிந்தனைக்கு நாம் சொல் தரமுயன்றால் அது சொற்களின் பிணங்களைத்தான் தரும். அப்படிப்பட்ட சொற்கள் நம் அன்றாட வாழ்வின் பயன்பாட்டு எல்லைகளுக்கு அந்தப்பக்கம்தான் நின்றுகொண்டிருக்கும். அப்படியானால் எப்படித்தான் தமிழ்ப்படுத்துவது என்ற கேள்விக்கும் விடைகண்டாக வேண்டும். ஒரு அன்னிய மொழியின் சொல்லை தமிழ்ப்படுத்தும்போது அது தமிழோடு தமிழாகக் கலந்துவிடக்கூடியதாகவும் எந்தவிதமான பொருள் சார்ந்த சந்தேகத்தையும் கிளப்பாததாக இருக்க வேண்டும். Hospital என்ற சொல்லை தமிழ் தனக்கு ஏற்றவாறு 'ஆஸ்பத்திரி' என்று மாற்றிக்கொண்டதைக் குறிப்பிடலாம். அதோடு நமது சிந்தனை வளத்தைச் சுட்டுவதாக அது இருந்தால் கூடுதல் சிறப்பு. அப்படி ஒரு உதாரணத்தை சில ஆண்டுகளாக பார்க்க முடிகிறது. Rape என்று ஒரு ஆங்கிலச்சொல். அதை இதுகாறும் 'கற்பழிப்பு' என்றே மொழிபெயர்த்து வந்துள்ளோம். ஆனால் சமீபத்தில்தான் 'பாலியல் வன்முறை' என்ற பிரயோகத்தைப் பார்க்க முடிந்தது. சரியான, உண்மையான, நேர்மையான, ஆக்கபூர்வமான தமிழாக்கம் எது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். 'கற்பழிப்பு' என்று சொல்லி, கற்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக வைக்கும் தமிழ் மரபை ஏற்றுக்கொள்ளாத, பெண்ணை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகின்ற இந்த சொல்லுக்கு பதிலாக, ஒரு ஆணால் பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதியைக் குறிக்கும் வகையிலும், 'ரேப்' என்ற ஒரு செயலில் உள்ள மனிதாபிமானத்துக்கு எதிரான பலாத்காரத்தை எடுத்துரைக்கும் விதத்திலும் இந்த 'பாலியல் வன்முறை' என்ற தமிழாக்கம் அமைந்துள்ளது. உண்மையான பெண்ணியச் சிந்தனையின் வளர்ச்சிக் குறியீடாகவும் இதைப் பார்க்கலாம். திமுகவுக்கு சன்-டிவிக்கும் உள்ள உறவை நாமறிவோம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று வாய்கிழியப் பேசுபவர்கள் தங்களது தொலைக்காட்சிக்கு ஆங்கிலத்தில்தானே பெயர்வைத்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் சன்-டிவி என்பதை தமிழ்ப்படுத்தினால் அது அபத்தமான அர்த்தம் தரும். 'சூரியத் தொலைக்காட்சி' என்றால் அது 'சூரியனிலிருந்து ஒளியைப் பெறுகின்ற' (solar) என்ற பொருளைக்கொடுக்கும். 'சூரியன்-தொலைக்காட்சி' என்றாலும் அந்தக் கூட்டுச்சொல் (compound word) சரியாக அமையாது. சன்-டிவி என்பதே சரியாகும். இது மொழியின் பயன்பாட்டைப் புரிந்து கொண்ட பெயர்வைப்பாகும். 'சூரியத்தொலைக்காட்சி' என்று பெயர் வைப்பதும் "ஒரு நல்ல பாம்பு படமெடுப்பதைப் பார்த்தேன்" என்பதை "I saw a good snake taking pictures" என்று மொழிபெயர்ப்பதும் ஒன்றுதான்! இனிமேலாவது வேற்றுமொழிச் சொற்களை தமிழுக்கு 'மதம் மாற்றுகின்ற' முயற்சிகளை விட்டுவிட்டு, தமிழுக்கு அவற்றை கலப்புமணம் செய்து வைக்க முயன்றால் உண்மையாக தமிழை வளர்க்க அது நிச்சயம் உதவும். தேம்ஸ¤ம் தஜ்லாவும் சரயூவும் கங்கையும் தமிழ்ப்பெருங்கடலில் சங்கமமாவதால் அதன் தூய்மை கெடும் என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் அதன் உண்மையான வளர்ச்சி பற்றி ஆக்கபூர்வமாக சிந்திப்பது நல்லது.